பழந்தமிழ் போர்வீரர்களின் அமைப்பு


பழந்தமிழ் போர்வீரர்களின் 
உடை கருவிகள் அமைப்பு
(கல்வெட்டு: தாராபுரம்)






 திருப்பூர்

பெருங்கற்காலம்(கி.மு.600) முதல் கொங்கு மண்டல மக்கள் கால்நடை வளர்ப்புடன், வேளாண்மை மற்றும் அரிய கற்களை கொண்டு மணிகள் செய்தல், இரும்பு கருவிகள் செய்தல், சங்கு வளையல்கள் மற்றும் மட்பாண்டங்கள் செய்தல் முதலிய தொழில்களையும் மேற்கொண்டனர் என்பதை வரலாற்றுச் சான்றுகள் மெய்ப்பிக்கின்றன. ஓர் இடத்தில் அதிகமாக உற்பத்தியாகும் பொருட்களை வேறு இடத்திற்கு கொண்டு சென்று விற்பனை செய்வதற்காக பண்டைய காலத்தில் பல பெருவழிகள் உருவாகி இருந்தன. இந்த பெருவழிகளில் பயணம் செய்யும் வணிகர்களும், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டிருந்த வேளாண் பெருங்குடி மக்களும் தங்கள் பாதுகாப்புக்காக வீரர்களை நியமித்து இருந்தனர். அவ்வாறு பாதுகாப்புக்கு இருந்த வீரர்கள் போரில் ஈடுபட்டு இறந்தால் அந்த மாவீரர் நினைவாக நடுகற்கள் எடுத்து வழிபடும் மரபு பண்டைய தமிழகத்தில் வழக்கத்தில் இருந்துள்ளது.

இந்த நிலையில் திருப்பூரில் இயங்கிவரும் வீர ராஜேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தை சேர்ந்த பொறியாளர் சு.ரவிக்குமார் மற்றும் க.பொன்னுச்சாமி ஆகியோர் தாராபுரம் அருகே உள்ள சின்னப்புத்தூர் கிராமத்தில் ஆய்வுமேற்கொண்டபோது ஒரு ஆலமரத்தின் கீழ் 1000 ஆண்டுகள் பழைமையான நடுகல் ஒன்றை கண்டறிந்துள்ளனர். இது குறித்து ரவிக்குமார் கூறியதாவது:-

இந்த நடுகல் 50 செ.மீ.உயரமும், 40 செ.மீ. அகலமும், 30 செ.மீ. கனமும் கொண்டது. இதில் இரண்டு மாவீரர்களின் உருவம் அழகோவியமாக செதுக்கப்பட்டுள்ளது. இதிலுள்ள முதல் மாவீரன் தனது இடது கையில் வில்லும், வலது கையில் அம்பும் வைத்துள்ளான். 2-வது மாவீரன் தன் வலது கையில் ஈட்டியும், இடது கையில் கேடயமும் வைத்து சற்றே சாய்ந்தவாறு உள்ளார். இரு வீரர்களின் அள்ளி முடித்த குடுமியும் மேல்நோக்கி உள்ளன. தோள் வரை தொங்கும் காதுகளில் குண்டலம் அணிந்துள்ளனர். கழுத்தில் கண்டிகை, சரப்பள்ளி போன்ற அணிகலன்களும், கைகளில் தோள்வளை மற்றும் வீரத்துக்கு அடையாளமாக வீரக்காப்பும் அணிந்துள்ளனர்.

இடையில் மட்டும் மடிந்த மிகவும் நேர்த்தியான ஆடை அணிந்துள்ள மாவீரர்கள் தங்கள் கால்களில் வீரக்கழலும் அடைந்துள்ளனர். எழுத்து பொறிப்பு இல்லாத இந்த நடுகல்லின் சிலை அமைப்பை வைத்துப் பார்க்கும் போது இது 1000 ஆண்டுகள் பழமையானது ஆகும். மேலும் இங்கு உடைந்த நிலையில் காணப்படும் கருப்பு-சிவப்பு பானை ஓடுகள் மற்றும் இரும்பு கசடுகள் மூலம் சின்னப்புத்தூர் கிராம மக்கள் ஏறத்தாழ 2 ஆயிரம் ஆண்டுகளாகக் கால்நடை வளர்ப்பு, வேளாண்மையுடன் வணிகமும் செய்துவருவதை நாம் அறிய முடிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

நன்றி: தினத்தந்தி


Comments

Popular posts from this blog

சீமான் வாழ்க்கைவரலாறு - ''யார் இந்த சீமான்?'' SEEMAN Full Bio-data சீமான் பற்றிய தகவல்கள்!

VALLATTAM - வல்லாட்டம்