பொங்கல்  பண்டிகை வரலாறு


பொங்கல் காலத்தில் வீட்டில் வெள்ளை அடிப்பதும், பொங்கபடி என்ற பழங்கால போனஸ் முறையும், மருமகனுக்கு பொங்கசீர் என்ற சீர்வரிசையும்...  ஆகிய முறைகள் நம் கண்முன்னே அழிந்து வரும் இக்காலத்தில், இத்தனை பண்பாட்டு கூறுகளையும் 20ம் நூற்றாண்டு வரை கொண்டு வந்து கொடுத்த பொங்கல் பண்டிகையின் சில மிச்ச வரலாற்று அசைவுகளை ஆவனப்படுத்தப்பட வேண்டியது நம் கடமை.



2000 ஆண்டுகள் பழமையான பொங்கல் பண்டிகை பற்றி சங்க காலப் பாடல்களில் உள்ள தகவல்கள் ;


வலங்கு செந்நெல் கதிர்வேய்ந்த வாய்

கரும்பின் கொடிக்கூரை சாறு கொண்டகளம்

போல் வேறுவேறு பொலிவு தோன்ற குற்றானா

உலக்கையால் கலிச்சுமை வியாலங்கன்(புறம்:22)


என்ற புறநானூற்றுப் பாடல் தைத்திருநாளில் செந்நெல்லினை அறுத்து கரும்பினைக் கட்டி அந்த இடத்தில்  நெல்லோடு வேயப்பட்ட நெல்லந்தாள் கூரை வீடும்,  கருப்பஞ்சருகு வேய்ந்த கூரை வீடுகளும் தனித்தனியே விழாக் கொண்டாடப்பட்ட களம் போலப் பொலிவுடன் காட்சி தருகின்றன என்று கூறுகிறார் குறுங்கோழியூர் கிழார்.  


பழங்காலப் பெண்கள் தை மாதத்தில் நோன்பிருந்த செய்திகளை சங்க இலக்கியங்கள் குறிப்பிட்டிருக்கின்றன. தை மாதத்தில் நோன்பிருந்து, வைகை ஆற்றில் நீராடி, சிறந்த கணவர் வாய்க்கப்பெற வேண்டும் என பெண்கள் வேண்டியதாக 'பரிபாடல்' கூறுகின்றது.


'தீயெரிப் பாலுஞ் செறிந்த முன் பூற்றியோ

தாயருகா நின்று  தவத் தைந்நீராடல்

நீயுரைத்தி வையை நதி'(பரிபாடல்:11)


"பைதுஅற விளைந்த பெருஞ்செந் நெல்லின்

தூம்புடைத் திரள்தான் துமிந்த வினைஞர்"

என அறுவடை செய்யும் உழவரைப் பற்றி பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது. இவ்வாறு உழவைப் போற்றிய பண்டைத் தமிழர் அறுவடை விழாவைக் கொண்டாடியிருப்பர் என்பதை உறுதியாக நாம் நம்பலாம்.

"புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்

பூவும் புகையும் பொங்கலுஞ் சொரிந்து'(சில.5:68-69)


சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாவின் துவக்கத்தில், காவல்பூதத்திற்கு, புழுக்கலும், நோடையும், விழுக்குடை மடையும், பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து வழிபட்டதாக, குறிப்பிடப்படுகிறது. இதில் புழுக்கல் என்பதுதான்  பொங்கலாகக் கருதப்பட்டு வந்திருக்கிறது. இதன் மூலம் பொங்கல் வைத்து வழிப்படும் முறை சங்க காலத்திலிருந்தே தமிழரின் மரபாய் திகழ்ந்து வருகிறது.


மதுக்குலாம் அலங்கல் மாலை

மங்கையர் வளர்த்த செந்தீப்

புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்(சீவக. சிந். 1821) 


சீவக சிந்தாமணி என்னும் காப்பியத்திலும் பொங்கல் பற்றிய  குறிப்பு இடம்பெறுகின்றது.  செந்தீ மூட்டிப் புதுப் பானையில் இனிய பாலொடு கலந்த சோற்றைப் பொங்கலாகப் பொங்கிடும் பாவையரின் பழக்கம் புலப்படுத்தப்படுகிறது. 


கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு அளவில் நடைபெற்ற பொங்கல் இடும் முறையாக இதனை நாம் கருதலாம்.புழுக்கலும், நோலையும் விழுக்குடை மடையும்.

பெண்களின் நோன்பு பற்றிய தகவல்களை  கலித்தோகை பாடல் நமக்கு எடுத்துரைக்கிறது.

வையெயிற்றவர் நாப்பண் வகையணிப் பொலிந்து நீ தையில் நீராடி தவம் தலைப் படுவையோ”                               கலித்தொகை (59:12-13)


பெண்கள் உலக நன்மைக்காக நோன்பிருந்து நீராடியது போல நல்ல கணவன் தமக்குக் கிடைக்க வேண்டுமென தைத்திங்களில் நீராடி வீடு வீடாகச் சென்று பாடி தாம் பெற்றதை பிறர்க்கும் கொடுத்தனர். இதுபோல் பல சான்றுகள் உள்ளன. ஒவ்வொரு காலத்திலும் பெயர்கள் தான் மாறியுள்ளதே தவிர வழிமுறையும், வழிப்பாட்டு முறையும் மக்களிடம் மாறவில்லை. அதேபோல் அறுவடைத் திருவிழாவில் தான் பொங்கல் வைத்து வழிப்பட்டு வந்தனர். காலப்போக்கில் அறுவடைத் திருவிழாவை தான் தைப்பொங்கலாய் இப்பொழுது நாம் கொண்டாடி வருகிறோம்.

Comments

Popular posts from this blog

சீமான் வாழ்க்கைவரலாறு - ''யார் இந்த சீமான்?'' SEEMAN Full Bio-data சீமான் பற்றிய தகவல்கள்!

VALLATTAM - வல்லாட்டம்